måndag 12 mars 2018

04. அழகிய தாஜ்மஹலும் அசிங்கமான யமுனாவும்


பங்களா சாகிப் குருத்துவாராவுக்குள் போய் ஆறுதலாக உள்ளே சுற்றிப் பார்த்தோம். வெளியே மதிய நேரத்துக்கு வந்துவிட்டோம். அன்றிரவு ஆக்ராவில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்திருந்தேன்.

போகும் வழியில் இருக்கிறது மதுரா நகரம், அருகே விருந்தாவன். கிருஷ்ணன் தனது அவதாரத்தில் இங்கேதான் பிறந்து வளர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அடிக்கொரு கோவில் இருக்கும் அப்பகுதிக்கு நான் ஏற்கனவே அங்கே போயிருக்கிறேன். அங்கேதான் ஹரே கிருஷ்ணா மதத்தினரின் முக்கிய ஸ்தலமும் இருக்கிறது.

இப்பிரயாணத்தில் அங்கே கூட்டிச் செல்வதாகக் கதிருக்குச் சொல்லியிருந்தேன். அங்கே போயிருந்தபோது எடுத்த படங்களைப் பார்த்ததில் அவனும் ஆர்வமாக இருந்தான். ஆனால், அதைப் பற்றிப் பேசிக்கொண்டே அவன் காருக்குள் நித்திரையாகிவிட்டான். அவனது ஆழமான நித்திரையைப் பார்த்து அவனை வழியில் எழுப்ப முடியாது என்று புரிந்தது.

எனவே சாரதியிடம் நேரடியாக ஆக்ராவுக்கு நாங்கள் தங்கவிருந்த ஹோட்டலுக்கே போகச்சொன்னேன். முன்பு இப்பகுதிக்கு வந்ததோடு ஒப்பிடும்போது வழியெங்கும் பசுமையாக இருந்தது. சாயங்காலமளவில் ஆக்ரா நகரில் எங்கள் விடுதிக்குப் போய்ச் சேரும்போது நல்ல பசியெடுத்தது. உணவுக்கு ஒழுங்குசெய்துவிட்டு களைப்புப் போகக் குளித்துத் தயாரானோம்


எங்களை விமான நிலையத்திலிருந்து ஆக்ராவரை கொண்டுவர அந்த விடுதிக்காரர் மூலமே ஒழுங்கு செய்திருந்தேன். அதற்கான கட்டணத்தைச் செலுத்தியபோது அங்கே தங்கவிருக்கும் நாட்கள் இரண்டுக்கும் நாங்கள் எங்கெங்கே போகத் திட்டமிடுக்கிறோம் என்று சொல்லி அதற்காக வாகன ஒழுங்குகள் செய்து தரமுடியுமா என்று கேட்டுப் பேரம் பேசினேன். ஒவ்வொரு தேவைக்கும் அவ்வப்போது வாகனம் ஒழுங்குசெய்துகொள்வது நேரவிரயமாகும் என்பதுடன் பெரும்பாலும் அதிக செலவையே கொண்டுவரும் என்பதும் எனது அனுபவம்

அன்று மாலையிலிருந்து எங்களுக்காக ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்து தருவதாகச் சொன்னார் விடுதி முகாமையாளர். அந்தச் சாரதியே எங்களை ஆக்ராவைவிட்டுப் போகும்போது ரயில் நிலையத்திற்கும் கொண்டுபோய் விடுவதாக ஒப்பந்தம்




இருளும் சமயமாகப் புறப்பட்டு வண்டியில் ஆக்ராவை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு நகருக்குள் இறங்கி வீதியோரக் கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தோம். அந்தப் பகுதிகளில் ருசியான பான் பீடா செய்வார்கள் என்று தெரியும். எங்களுடன் நடந்துவந்து நகரச் சந்துக்கள் மூலமாகக் கூட்டிச் சென்ற சாரதி எங்களிருவருக்கும் சுத்தமான கடையொன்றுக்குக் கூட்டிசென்றார்.

ஒழுங்கின்மை என்பதே ஒரு ஒழுங்காக எங்களைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்ததது. பாணி பூரி, பேல் பூரி என்று என்னென்னவோ பூரிகளும், சிற்றுண்டிக் கடைகளும் படு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தன. ஆளுக்கொரு பீடாவும் வாங்கிச் சப்பியபடி,  சாப்பிட ஏங்கிக்கொண்டிருந்த மாம்பழங்கள் கொஞ்சம் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பி அந்த நாளை முடித்துக்கொண்டோம்.


இந்தியாவுக்குப் போகத் திட்டமிட்டது முதல் மாம்பழங்கள் ஆசைதீரச் சாப்பிடவேண்டும் என்ற ஆசையில் இருந்தான் கதிர். காலையில் அவைகளைச் சாப்பிடலாமென்று எண்ணியபோதுதான் எங்களிடம் கத்தியெதுவும் இல்லை வெட்டுவதற்கு என்று ஞாபகம் வந்தது. அதனாலென்ன, சிறு வயதில் நாங்கள் எங்கள் வீட்டு மாம்பழங்களை கத்தியால் வெட்டியல்ல வாயாலேயே தோலைக் கடித்துச் சாற்றை உறிஞ்சிச் சாப்பிடுவோம் என்று அவனுக்குச் சொல்லிக்கொடுத்தேன். நெஞ்சு வழியாக வழிய வழியச் வயிறு நிறைய மாம்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு ஐந்தரைக்கே தாஜ்மஹாலின் மேற்கு வாசலுக்குப் போய்விட்டோம்.

 சுமார் இரண்டரை மில்லியன் பேரை வருடாவருடம் தன்னிடம் வரவைக்கும் உலக அதிசயமொன்றைப் போய்ப் பார்ப்பதென்றால் அதிகாலையில் அங்கே கதவைத் திறக்குமுன்பே போய்விடவேண்டும்

வல்லரசைச் சேர்ந்த இந்தியர்கள் 40 ரூபாயுடன் பார்க்கக்கூடிய தாஜ்மஹாலுக்கு சார்க் குழுமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறீலங்காக் குடிமகனாகிய என்னிடம் 500 ரூபாய் அறவிட்டது அநியாயம். எனது மகன் சுவீடிஷ் குடிமகன் என்பது தெரிந்தால் அவனுக்காக 1000 ரூபாய் கறப்பார்கள் என்று தெரிந்து நுழைவுச்சீட்டு வாசலுக்கு வெளியே அவனை நிற்கவைத்துவிட்டு அவனுக்கும் 500 ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கினேன்.

கடவுள் கூகுளைப் படைத்தபோதே இப்படியான இடங்களில் சுற்றுலா வழிகாட்டித் தொழிலை ஒழிக்கத் தீர்மானித்துவிட்டானென்பது பல வழிகாட்டிகளுக்குப் புரியவில்லை.  “வழிகாட்டியின் உதவியில்லாமல் தாஜ்மஹால் பார்த்தால் உனக்கு எதுவும் விளங்காது, என்ற வாதத்தைக்கூட முன்வைத்து ஆயிரத்தில் ஆரம்பித்து நீங்கள்தான் இன்று எனது முதலாவது சுற்றுலாப் பயணிகள் என்பதால் எனது சேவையை மலிவாக்குகிறேன், என்று 100 ரூபாவரை இறங்கிவந்தார்கள் சிலர்.

காகங்கள் போல முற்றுகையிட்ட அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்தால் போதும் அதிலிருந்தே கதைகள் பேசி வியாபாரத்துக்கு முயற்சிப்பார்கள் என்பதால் அவைகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனமானது.

ஆறு மணியளவிலேயே உள்ளே நுழைந்து விட்டதால் அத்தனை கூட்டம் உள்ளே இருக்கவில்லை. இங்கேயும் சமீபத்தில் நல்ல மழை பெய்திருந்ததால் பின்னாலிருந்த யமுனை நதியில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இதே சமயத்தில் வந்திருந்தபோது அப்பிரதேசம் முழுவது வரண்டு கிடந்தது ஞாபகம் வந்தது.


இமாலயத்தில் சுமார் 6, 400 மீற்றர் உயரத்தில் இருந்து ஆரம்பிக்கும் யமுனை சுமார் 1,400 கிலோ மீற்றர்கள் ஓடி அல்லாஹாபாத்தில் கங்கையுடன் சேர்கிறது. தனது வழியில் 100 மில்லியன் மக்களின் வாழ்க்கையுடன் இணைந்திருக்கிறது.


உலகின் இரண்டாவது அசுத்தமான நதியென்று விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படும் யமுனை வழியெங்கும் எத்தனையோ மனிதர்களின் அசிங்கங்களையும் தொழிற்சாலைகளின் நச்சு இரசாயணக் கழிவுகளையும் தனக்குள் கொண்டிருக்கிறது. யமுனை நதியின் டெல்லி நீரின் சுமார் ஒவ்வொரு 100 மி.மீற்றரிலும் 22 மில்லியன் மிக மோசமான [fecal coliform bacteria] கிருமிகள் இருப்பதாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான கிருமிகள் 100 மி.மீற்றருக்கு 235 கிருமிகள் இருப்பின் அந்த நீர் மனித பாவனைக்கு ஆகாது என்று அமெரிக்காவும் 500 இருப்பின் ஆகாது என்றும் இந்தியாவும் குறிப்பிடுகிறது. அதைத் தவிர மூளை நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கக்கூடிய கிருமிகளும் நிறைந்திருக்கிறது யமுனையில்.




தாஜ்மஹலைச் சுற்றியுள்ள பூங்கா காலை வெயிலில் இதமாக இருந்தது. அவ்வளாகத்திலுள்ள அழகிய கட்டடங்களையெல்லாம் பார்த்துவிட்டுக் கடைசியாகத்தான் தாஜ்மஹலின் மண்டபத்துக்குள் நுழைந்தோம்.

இவ்வளவெல்லாம் அழகாகக் கட்டிவிட்டு இதற்குள் இருப்பது வெறும் கல்லறைகள் தானா, என்று அலுத்துக்கொண்டான் கதிர்.

தொடரும்………..