onsdag 31 januari 2018

02. டெல்லியில் ஒரு காலைப்பொழுது.



நீண்டதொரு பகுதிப் பிற்பகலை நின்றபடியே எல்லைக் காவல்ப் பகுதியில் அன்று கழிக்கவேண்டியிருந்ததால் விமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய பிராந்தியத்திற்கு வந்தபோது எங்காவது ஆறுதலாக இருக்கவேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம். சுமார் இரண்டு மணிநேரமாவது நின்றுகொண்டிருந்த கால்கள்ஓய்வு வேண்டும்,’ என்று கெஞ்சின.

ஒழுங்காக நேரத்துக்கு விமானவீதியில் ஓடி வானத்து முகில்களுக்குள் பாய்ந்தது எங்கள் விமானம். எப்போதும்போல பரபரவென்று சேவைகளை ஆரம்பித்தார்கள் விமானப் பணியாளர்கள். பழரசங்களில் ஆரம்பித்து, சின்னப் போத்தல்களில் திராட்சை ரசம், விஸ்கி, ரம், வோட்கா என்று தொடர்ந்து இரவு உணவும் சுடச்சுடப் பரிமாறினார்கள்.

கதிரின் முக்கிய கவனம் அவனுக்கு முன்னாலிருந்த திரையில்தான். சாளரத்துக்குப் பக்க இடம் கிடைத்திருந்தாலும் இரவாகிவிட்டதால் எதையும் பார்க்கமுடியாதே. எமிரேட்ஸ் விளம்பரங்களுடன் திரைப்படங்கள், விதம்விதமான தொலைக்காட்சித் தொடர்கள், இசை, விளையாட்டு என்று எக்குறையும் வைக்காத அளவுக்கு நிகழ்ச்சிகள் கைக்கெட்டும் தூரத்திலிருந்தன.

பல தடவைகள்தூங்கு, இல்லாவிட்டால் டுபாயில் உனக்குக் களைப்பாயிருக்கும்,” என்று சொல்லியும் தனது பொழுதுபோக்குகளில் ஆழ்ந்திருந்ததால் நடுநிசியில் டுபாயில் இறங்கும்போது நல்ல களைப்பு மகனுக்கு.

நான் சொன்னதைக் கேட்காமல் நீ இவ்வளவு நேரமும் தூங்காமலிருந்தாய், இங்கே உனக்கு விளையாட அனுமதியில்லை, தூங்கவேண்டும், என்று தெளிவாகச் சொல்லிவிட்டதால் எந்தவிதப் பேரம்பேசலுக்கும் புரிந்துகொண்ட அவன் ஏதுவும் பேசவில்லை.


டுபாய் விமான நிலையத்தின் விற்பனை வரியில்லா வியாபார மையம் சுமார் 40, 000 சதுர மீற்றர்களுடன் சுமார் 6 000 பேர் வேலை செய்யும் இடம். போகப் போக விரிந்துகொண்டே இருக்க்கும். அதை இன்னும் இரண்டு மடங்காக்கும் திட்டம் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வியாபாரம் நடக்கும் இப்பிராந்தியத்தில் 12.4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வாசனைத்திரவியங்களின் விற்பனைதான் முதலிடத்திலிருக்கின்றது, அதையடுத்த இடத்தில் சுமார் 11 மில்லியன்களுக்கு விற்கின்றன ஒப்பனைப் பொருட்கள்.

நண்பர்களுக்குக் கொடுப்பதற்காகச் சில பைகள் இனிப்பு, சாக்கலேட் போன்றவற்றை மட்டும் வாங்கிக்கொண்டோம். எங்கள் பயணம் நீண்டது என்பதால் மதுவகைகள் வாங்குவதைத் தவிர்த்துக்கொண்டேன். அடுத்ததாக  தூங்கக்கூடியதான சார்மனைக் கதிரைகள் இருக்கும் பகுதிக்கு நடந்தோம்.
சுமார் நான்கு மணித்தியாலங்கள் இருந்தன எங்கள் அடுத்த விமானத்துக்கு. படுத்த உடனேயே விசையை அழுத்திவிட்டதுபோலத் தூங்கிவிட்டான் கதிர்.


இந்தியாவிலிருந்து எடுப்பித்து வைத்திருந்த ஒரு இந்தியத் தொலைபேசி இலக்கத்துக்கான சில்லை என்னுடன் கொண்டுவந்திருந்த இரண்டாவது தொலைபேசிக்குள் போட ஒரு உதவிப்பொருளை வாங்கவேண்டியிருந்தது. எனவே அருகிலிருந்த தொலைபேசிக் கடையொன்றைத் தேடிப்பிடித்து அதை வாங்கிக் பொருத்திக்கொண்டபின் நானும் பக்கத்துக் கட்டிலொன்றில் படுத்து எங்கள் அருகிலிருந்த பொருட்களில் கவனத்தை வைத்துக்கொண்டே தூங்கினேன்.

டுபாய் விமான நிலையத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டது எங்கள் விமானம். இப்பயணம் முதல் பயணமளவு நீளமானதல்ல. எனவே உடனேயே வரவேற்று தாகசாந்தி செய்துகொள்வதற்கானவற்றைக் கொடுத்துக் காலை உணவையும் வழங்கினார்கள். அதன்பின்பு விளக்குகளை அணைத்துவிடவே நாங்கள் மீண்டும் தூங்கக் கொஞ்ச நேரம் கிடைத்தது.


டெல்கி விமான நிலையத்திலிறங்கச் சிறிது நேரத்து முன்னதாக விமானப் பணியாளர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் பூர்த்திசெய்ய வேண்டிய படிவத்தைத் தேவையானவர்களுக்கு விநியோகித்தார்கள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்து எல்லைக்காவலில் ஒரே நேரத்தில் சுமார் இருநூறு பேராவது வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். மிக வேகமாக வேலைசெய்கிறார்கள், ஆனால், நாட்டுக்குள் வருபவர்களைச் சிரித்த முகத்துடன் வரவேற்பதில் எவருக்குமே அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் இவ்விமான நிலையத்தினூடாகப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. வருடாவருடம் சுமார் 100 மில்லியன் பேர் இதனூடாகப் பயணிக்கிறார்கள். ஐரோப்பிய, மத்திய கிழக்கு விமான நிலையங்கள் போன்று பளபளப்பாக இல்லாவிட்டாலும் துப்பரவாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்ளப் பழகிவிட்டிருக்கிறார்கள் விமான நிலைய நிர்வாகிகள்.

 ஏற்கனவே பூர்த்திசெய்திருந்த படிவங்களுடன் எங்களது கடவுச் சீட்டுகளையும் விசாக்களையும் காட்டி உள்ளே நுழையத் தேவையான வேலைகளைப் பூர்த்திசெய்துகொண்டு காலை பத்து மணியளவில் வெளியே வந்தபோது ஒழுங்குசெய்திருந்தபடி வாடகைக் கார்ச் சாரதி எங்களுக்காகக் காத்திருந்தார்.  

நீண்ட காலமாக வறண்டிருந்த டெல்கியில் நாங்கள் வரமுன் சில நாட்களாக நிறைய மழை விழுந்திருந்தது. வெயிலும் மந்தாரமாகவே இருந்தது. இதற்கு முன்பு நான் போயிருந்த சமயங்களைவிட இதமான வெப்பநிலை. ஆங்காங்கே விழுந்த மழை தேங்கியும் கிடந்தது.


எங்களுக்குத் தங்குவதற்காக ஆக்ராவில் விடுதி ஒழுங்குசெய்திருந்தேன். டெல்லியிலிருந்து ஆக்ராவுக்குக் கார்ப்பயணம் சுமார் நாலு மணித்தியாலம் எடுக்கும். அவ்வழியில் கிருஷ்ணன் அவதாரமாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் மதுரா, பிருந்தாவன் இருக்கின்றன.

இப்பயணத்தின்போது வெவ்வேறு மதங்களின் கோவில்கள் சிலவற்றைக் கதிருக்கு அறிமுகப்படுத்துவதாகத் திட்டமிட்டிருந்தேன். எனவேதான் விமானத்துக்குள் இரவுப் பயணத்தில் நன்றாகத் தூங்கிவிட்டால் ஆக்ராவுக்கான பகல்ப் பயணத்தின்போது கிடைக்கும் நேரத்தைப் பிரயோசனமாக்கலாம் என்பது எங்கள் எண்ணம்.

எங்கெங்கே போகவேண்டும் என்பதை விபரமாகச் எழுதியே வாடகை வாகனத்தை தங்கும் விடுதியின் மூலம் ஒழுங்குசெய்திருந்தேன். ஆனாலும் முதலாவதாக நாங்கள் போகத் திட்டமிட்டிருந்த இடமான டெல்லியின் மிகப்பெரிய குருத்துவாராவான பங்களா சாஹிப் எங்கிருக்கிறது என்பதோ அதன் பெயரையோ கேட்டதில்லை என்றான் சாரதி.

அப்படியானால் யாரிடமாவது கேட்டு விசாரித்துத் தெரிந்துகொள், எங்களுக்கு அங்கே போகவேண்டும், என்றேன் எனக்குத் தெரிந்த ஹிந்தியில். சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு பஹ்ரேனில் பத்து வருடங்கள் வாழ்ந்தபோது மிக நன்றாகத் தெரிந்த ஹிந்தி மொழியை இப்போதெல்லாம் வட இந்தியாவுக்கு வரும்போது மட்டும் பயிற்சிசெய்துகொள்ள முடிகிறது. ஆங்கிலம் தெரியாத சாரதியாக இருந்ததால் சரியோ பிழையோ முடிந்தவரை முயற்சிசெய்ய வாய்ப்புக் கிடைத்தது. எப்போதும் ஒருவரிடம் அவரவரது மொழியில் கதைக்கும்போது அவர்களின் நெஞ்சைத் தொடுகிறோம் என்பது என் அனுபவம்.


காரை ஓரமாக நிற்பாட்டிவிட்டு யாரோ ஓரிருவரிடம் தொலைபேசியில் தன்னிடமிருந்த தொலைபேசியில் தொடர்புகொண்டு வழியைத் தெரிந்துகொண்டு வந்தார் சாரதி. நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அந்த குருத்துவாரா.  டெல்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கொன்னாவுட்பிளேஸில் இருந்தது.


தொடரும் ..