முதன் முதலாக நான் இந்தியாவுக்கு 2006 ஆண்டு போயிருந்தேன். எனது மகன் கதிருக்கு ஒரு வயதாகும் போது 2009 இல் இந்தியாவுக்கு முதல் தடவையாகக் கூட்டிச்சென்றேன்.
ஆனாலும் 2017
இல் ஒன்பது வயதாகும் கதிர் விசயம் தெரிந்து முதல் தடவையாக இந்தியாவுக்குப் போவதால் அவனுக்கு இப்பயணம்தான் இந்தியாவுக்கு முதல் தரம் போல இருக்கிறது. சமீப வருடங்களில் நாங்கள் எங்கே போகிறோம் என்றெல்லாம் சொல்லி அவ்விடங்களைப் பற்றிக் கொஞ்சம் அறிமுகம் செய்தேன்.
குழந்தையாக அவன் மூன்று தடவை இந்தியாவுக்குப் போயிருக்கும் காலத்தில் எடுத்த படங்களை காட்டினேன். அவனும் தனக்குத் தோன்றும் விடயங்களை இணையத்தில் தேடி வாசித்தான். அதனால், ஏற்கனவே நான் போட்டிருந்த திட்டத்துக்குள் தாஜ்மகாலைச் சேர்க்கவேண்டி வந்தது, அவனது ஆசைப்படி. அத்துடன் ஆக்ராவை அடுத்துள்ள நான் போயிருக்காத ஓரிரு இடங்களும் பயணப் பட்டியலில் சேர்ந்தது.
சுவீடனின் ஸ்டொக்ஹோம் - ஆர்லாண்டா விமான நிலையத்திலிருந்து “எமிரேட்ஸ்” மூலம் டுபாய், அங்கிருந்து டெல்கி என்பது பயண வழி.
நாங்கள் வாழும் பாலுன் [Falun] நகரிலிருந்து காலை ஒன்பது மணியளவில் ரயிலில் புறப்பட்டு மதியம் போல் விமான நிலைய ரயில் நிலையத்தில் இறங்கினோம். ஓரிரு மணித்தியாலங்கள் விமானங்களில் ஏறும் மண்டபத்துக்குப் போகக் காத்திருக்கவேண்டியிருந்தது. மாலையில்தான் எங்கள் விமானம் புறப்படுகிறது.
ஏற்கனவே இணையத்திலேயே நாங்கள் எங்கள் வரவைப் பதிவுசெய்துவிட்டிருந்ததால் எங்கள் பெட்டிகளை மட்டும் கொடுத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுவதைப் பதியும் இடத்திற்குப் போனோம்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே போவதற்காக ஸ்டொக்ஹோமிலிருந்தே பதியவேண்டியிருந்தது. அங்கே வழக்கத்துக்கு மாறாகப் பெரும் கூட்டம் காத்திருந்தது. இதைப் போன்ற, இதைவிட அதிக கூட்டத்தில் இதே காரணத்துக்காக மற்ற ஐரோப்பிய நாடுகளில் காத்திருந்திருக்கிறேன். சுவீடன் போன்ற ஸ்கண்டினேவிய நாடுகள் இப்படியான இடங்களில் மிகவும் இலகுவாக நகர்வதற்காக ஒழுங்குகளைச் செய்திருப்பது வழக்கம். ஆனால், அதிசயமாக அன்று எல்லைக் காவலதிகாரிகளாக இரண்டே பேர்தான் காத்திருக்கும் கூட்டம் நீண்டுகொண்டே இருந்தது. ஒரே சமயத்தில் பத்துப் பேராவது கடமையிலிருக்கும் வசதி அங்கிருந்தது.
அன்றைய கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஜப்பானியர்கள். சுவீடனில் குழுவாகச் சுற்றுலாவுக்கு வந்துவிட்டு விமானத்துக்காகக் காத்திருந்தார்கள் அவர்கள்.
சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தும் வரிசை மிக மிக மெதுவாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று அங்கே காத்திருந்த ஜப்பானியர்கள் நடுவே சலசலப்புத் தெரிந்தது. எல்லோரும் தாள லயத்துடன் தங்களின் கைகளைத் தட்டி காலணிகளால் நிலத்திலும் தட்ட ஆரம்பித்தார்கள்.
தங்கள் காரியாலயக் கூண்டுக்குள்ளே நின்ற எல்லைக் காவலர்கள் அதைக் கவனித்தாலும் எவ்வித சலனமும் காட்டாமல் தங்கள் கடமையே கண்ணாக இருந்தார்கள். ஜப்பானியர்கள் தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.
ஸ்கண்டினேவியர்களின் இந்தச் சலனமற்ற நடப்பை நான் பல தடவைகள் கண்டு வியந்திருக்கிறேன். இந்தியாவைச் சுற்றிவர உள்ள நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழுபவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத்தான் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவது வழக்கம். ஜப்பான், சீனா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நாட்டினர் ஓரளவு அமைதியான முறையில் கண்டனத்தைக் காட்டுவர்கள். ஸ்கண்டினேவியர்களோ எவ்வித சலனமும் இல்லாமல் உணர்ச்சியை விழுங்கிக்கொண்டு மெதுவாகத் திட்டமிட்டுத் தங்களின் காரியத்தை நகர்த்துவார்கள்.
மேலும் சுமார் அரைமணி கடந்தபின்பு மேலும் நான்கு எல்லைக் காவலர்கள் கடமைக்கு வர மிகவேகமாக அங்கு காத்திருந்த வரிசை கலைந்தது. நாங்கள் காத்திருப்பு மண்டபத்தினுள் நுழைந்தோம்.
தொடரும்……..
Inga kommentarer:
Skicka en kommentar