சீக்கியர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகக் காரணம் எனது நண்பி ஒருத்தியும் அவர்களது குடும்பத்தினருமே. சுவீடனில் வாழும் அவர்கள் நான் முதல் தடவையாக இந்தியாவுக்குப் போனபோது பஞ்சாப்பிலிருக்கும் தங்களது நெருங்கிய குடும்ப உறவினர் வீட்டில் தங்கி அவர்களுடன் தங்கக் கோவில், சிம்லா உட்பட பஞ்சாப்பின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.
சாதி வேறுபாடுகள் உட்பட பல பிற்போக்கு எண்ணங்களுடன் பொதுவாக மற்றைய இனத்தினரைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் வாழும் சீக்கியர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததால் அவர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. பல தடவைகள் அவர்களுடன் வெவ்வேறு குருத்துவாராக்களுக்குப் போயிருக்கிறேன். அங்கு நடக்கும் சடங்குகளில் “கிர்த்தான்” எனக்கு மிகவும் பிடித்தமானது.
அச்சமயத்தில் குரு\ஆதி கரந்த் என்ற அவர்களது புனித புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கீர்த்தனைகளை ராகத்துடன் பாடுவார்கள். குறிப்பிட்ட வசனங்களையே மீண்டும் மீண்டும் வேகமாகப் பாடுவதை மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். கதிர் குழந்தையாக இருக்கும்போது அவனையும் சுவீடனிலிருக்கும் குருத்துவாராவுக்குக் கூட்டிச்சென்றிருக்கிறேன். சுமார் ஒரு மணித்தியாலம் தொடர்ந்து நடக்கும் “கிர்த்தான்” சடங்கின்போது அவன் என் மடியில் இருப்பதுண்டு, என்றுமே அழுததே இல்லை.
டெல்லியில் பங்களா சாஹிப் குருத்துவாராவுக்குப் போவதைவிட அம்ரித்ஸரில் தங்கக் கோவிலுக்குப் போவதே அவனுடைய ஆசையாக இருந்தது. எங்கள் பிரயாணத் திட்டத்துக்கு இந்த முறை அது சரிவராததால் பங்களா சாஹிப்புக்குப் போவதற்கு முடிவுசெய்தேன்.
‘எனது சமயம்தான் சரியானது, அதனால் மற்றவர்கள் மீதெல்லாம் அதைத் திணிப்பதுதான் எனது சமயத்தின் நோக்காக இருக்கவேண்டும்,’ என்ற ஆக்கிரமிப்பு நோக்கே பக்தியாகக் கருதப்படும் இச்சமயத்தில் இளவயதிலேயே பிள்ளைகளுக்கு முடிந்தவரை வெவ்வேறு சமயங்களைப் பற்றி அறிமுகப்படுத்தி, அந்த மார்க்கங்களை நம்புகிறவர்களைப் புரிந்துகொள்ளவைக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்.
அரசியல் நடப்புக்களால், சில அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பித்தாலும்கூட, இன்றும், எல்லாச் சமயத்தினரும் இயல்பாக ஒன்று கலந்து வாழும் நாடாக இருக்கும் இந்தியாவிற்குப் போகும்போது அந்த முக்கிய விடயத்தை அவனுக்கு உணரவைக்காமல் இருந்தால் அது இப்பயணத்தின் தோல்விகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் புரிந்துகொண்டிருந்தேன்.
இந்த ஒன்றுகலப்புக்காக ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு எத்தனையோ பில்லியன்களைச் செலவிட்டு என்னென்னவோ செய்துகொண்டிருக்கும்போது இந்தியாவில் இயல்பாக ஒரு மதங்கள் கலந்த சமூகம் இருப்பதைப் பற்றி இந்திய அரசே பெருமையாக நினைப்பதில்லை என்பது ஒரு வேதனைக்குரிய விடயம். இதுவே ஐரோப்பிய நாடுகளில் இருந்திருப்பின் அவர்கள் இந்தக் காரணங்களை ஆராய்ந்து கண்டறிந்து அச்சமூக அமைப்பை ஒரு வியாபாரப் பொருளாக்கி விற்றுப் பெரும் இலாபம் சம்பாதித்திருப்பார்கள்.
ராஜா ஜெய் சிங்கின் உடமையாக ஜைசிங்புர மாளிகை என்ற பெயரில் இருந்த ஒரு பங்களா தான் தற்போது பங்களா சாஹிப் என்ற குருத்துவாராவாக ஆக்கப்பட்டிருக்கிறது. ராஜ்புத் ராஜா ஜெய் சிங் அச்சமயத்து மொகலாய அரசன் ஔரங்கசீப்பின் மிக நம்பிக்கைக்குரிய படைத் தலைவராக இருந்தவர்.
மொகலாய அரசன் ஷா ஆலம் II இன் காலத்தில் சீக்கியர்களின் படைகளுக்குத் தளபதியாக இருந்த பாகெல் சிங்கினால் இந்த பங்களா குருத்துவாராவாக மாற்றியமைக்கப்பட்டது.
சீக்கியர்களின் 8 வது குரு சிறி ஹரி கிஷன் இந்த மாளிகையில் தங்கியிருந்ததாகவும் இங்கேயிருக்கும் குளத்தின் நீர் பல ரோகங்களைக் குணப்படுத்தக்கூடியது என்றும் நம்பப்படுகிறது. அதனால் இந்தக் குருத்துவாராவின் கீழே ஒரு மருத்துவமனை ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவருகிறது.
பல்லாயிரக்கணக்கானோர் தினசரி விஜயம் செய்யும் பங்களா சாஹிப்பில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் எங்களை விட்டுவிட்டுச் சாரதி உணவருந்தப் போய்விட்டார். நேரம் மதியமாக ஆரம்பித்திருந்தது.
அது ஒரு சாதாரண செவ்வாய்க்கிழமையாததால் குருத்துவாராவில் அத்தனை கூட்டமில்லை. வாசலில் பாத அணிகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டுக் கால்களைக் கழுவிவிட்டுத் தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு உள்ளே போகவேண்டும் என்பதெல்லாம் கதிருக்குப் புதிய விடயங்கள். தலையையை மறைத்துக்கொள்ளும் “சுன்னி” என்ற துண்டு இல்லாதவர்கள் தற்காலிகமாகப் பாவிக்க ஒரு கூடையில் அவை நிறைய இருந்தன. ஒவ்வொருவரும் துப்பரவாகவே கடவுள் சந்நிதிக்கு வரவேண்டும் என்பதை ஆசியாவின் சமயங்கள் வலியுறுத்துவதைப் புத்தகத்தில் படிப்பதைவிட நேரில் செய்து கற்றுக்கொள்வது மேலானதல்லவா !
வழக்கம்போலவே இந்தக் குருத்துவாராவும் மிகவும் துப்பரவாக இருந்தது. ஆங்காங்கே தமது இடுப்பில் “கிர்ப்பான்” என்ற சிறிய வாளை அணிந்தவர்களையும் காண முடிந்தது.
சீக்கியர்களின் கடைசி\ஆறாவது குருவான ஹர் கோபிந்த் சிங் தான் சீக்கிய சமயத்தினுள் நுழையும் புனித சடங்கின் மூலம் [கந்தா டி பாகுல்] ஒருவர் கடவுளின் பெயரை எப்போதும் ஜெபிப்பதுடன், போராளியாகச் சமூகத்திலும், குடும்பத்திலும் செயலாற்ற வேண்டும் என்ற அடையாளத்துக்காக “கிர்ப்பான்” அணிதலையும் தலைமுடியை வெட்டாமல் இருப்பதையும் அறிமுகப்படுத்தினார். கடவுள் சேவைக்கும், குடும்ப, சமூகப் பொறுப்புக்கும் ஒரு சீக்கியர் சமமான முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்த அச்சடங்கின்போது சக்கரை கட்டிகளை நீரில் கரைத்துக் குறிப்பிட்டவரைக் குடிக்கச் செய்கிறார்கள்.
சீக்கிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர்கள் ஒரே விதமானவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உதாரணமாக ஹர்தீப் என்ற பெயர் இருபாலாருக்கும் உண்டு. அவர்களை வித்தியாசப்படுத்துவது பெயரின் கடைசியில் இருக்கும் சிங் [சிங்கம்], கௌர் [ராஜகுமாரி] என்பவைதான். அதை அறிமுகப்படுத்தியதும் ஹர் கோபிந்த் சிங் தான்.
இருபாலாரும் கையில் “கரா” என்ற வளையலை அணிந்திருப்பார்கள். கடவுளைக் குறிக்கும் அதன் அர்த்தம் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதாகும்.
நாங்கள் “தர்பார் சாகிப்” என்றழைக்கப்படும் தியான மண்பத்தை நோக்கி நடந்தோம். உள்ளேயிருந்து ராகத்துடன் பாடும் சப்தம் எங்களை வரவேற்றது.
மண்டபத்தினுள் நுழைந்ததும் ஒரு அரியணையைக் காண்கிறோம். அதிலே தலையணைகளின் மீது சிறீ குரு கரந்த் ஸாஹிப் இருக்கிறது. ஆதி கரந்த் எனப்படும் அப்புத்தகம் சீக்கியர்களின் குருவை உருவகப்படுத்துகிறது. ஒவ்வொரு காலையிலும் அதைத் தூக்கத்திலிருந்து எழுப்பி இரவில் தூங்கச் செய்வது வழக்கம்.
தொடரும்...
தொடரும்...